Sunday, 31 August 2014

, ,

கி.மு. கி.பி. ஒரு பிளாஷ்பேக்

நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் வரலாறு பாடங்கள் நடக்கும் போது தூங்கியது உண்டு.  இதற்கு முக்கிய காரணம், ஒன்று வரலாறு பாடப் பிரிவு எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கும் வகுப்பாக இருக்கும் அல்லது வரலாற்று பாடங்கள் சுவாரசியமாக எழுதப்படவில்லை அல்லது அவற்றை நடத்தும் ஆசிரியர்கள் அவற்றை அழகாக எடுத்துரைக்கவில்லை.  காரணம் எதுவாயினும் வரலாறு நமக்கு எப்போது சுவாரசியமாகப் படவில்லை.


ஆனால் காலம் செல்ல செல்ல வரலாற்றின் மீது ஏனோ அதீத ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.  அதனால் அது சம்மந்தப் பட்ட புத்தகங்களை தேடி தேடிப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி என் கண்ணில் பட்ட புத்தகம் தான், கி.மு. கி.பி.  முதல் பதிப்பாக 2006 ல் மதன் எழுதி வெளிவந்த இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை (2009) படித்தேன்.  

சுமார் 200 பக்கங்களுக்குள் ஆசிரியர் கி.மு வையும் கி.பி யையும் அடக்க முயன்றிருக்கிறார்.  உலகம் தோன்றியது, மனிதன் உருவாகியது முதல் தொடங்குகிறது இந்த புத்தகம்.  அதன் பிறகு சற்றே பயணித்து நாகரிகங்கள் வளர்ந்ததை விளக்குகிறது புத்தகம்.  

ஏதென்ஸ், கிரேக்கம் மற்றும் பாரசீகம் வரை சென்று இந்தியாவின் அசோகரின் கலிங்கத்து போரை நினைவு கூறும் ஆசிரியர் அழகான எளிமையான நடைமுறை தமிழிலில் விவரித்து இருக்கிறார்.  வரலாறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அசோகர், சந்திரகுப்தர், சாணக்கியர்.  அவர்களையும் தாண்டி இந்திய எல்லைகளை தாண்டி உள்ள நாடுகள் பலவற்றிலும் நடந்த வரலாற்று நிகழ்வுகளை கண் முன்னே காட்டுகிறார் ஆசிரியர்.

ஒருவேளை வரலாறை உங்கள் வகுப்புகளில் தவற விட்டிருந்தால் இந்த புத்தகம் உங்களை மீண்டும் அதை படித்து ருசிக்க உதவும்.  


புத்தகத்தைப் பற்றி
  • ஆசிரியர்:  மதன் 
  • பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
  • பக்கங்கள்: 192 பக்கங்கள்